சென்னை: கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலைவிட தற்போது நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளது. இதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக திமுக கூட்டணி கட்சியினர் தயாராக திட்டமிட்டுள்ளனர். படுதோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிபெற்றன. இதையடுத்து தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை தினசரி தொடங்கி வைத்து வருகிறார்.மக்களிடம் அரசுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்தன. காரணம், கடந்த 20 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை மக்கள் ஏற்றுக் கொண்டு எப்படி வாக்களிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திமுக மட்டுமன்றி பொதுமக்களிடமும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அதேபோன்று, அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு அணியாக பிரிந்துள்ள நிலையில் நடைபெறும் தேர்தல் இது. அதுவும், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றியுள்ள நிலையில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் நிலையில் அவர் இருந்தார்.
இடைத்தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு வெறும் 43,923 வாக்குகளே பெற்று படுதோல்வி அடைந்தார். , திமுக கூட்டணி வேட்பாளர் 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலைவிட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி கடந்த 20 மாதங்களாக தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் கருத்து கூறும்போது, ஈரோடு மாவட்டம் எப்போதும் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்து வந்தது. ஆனால் கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியால் ஈரோடு மாவட்டத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் அரசு பணத்தை கொள்ளை அடித்து, வெளிமாநிலத்தில் முதலீடு செய்வதில்தான் குறியாக இருந்தார்கள். ஆனால், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, தமிழக மக்களுக்கு தினசரி ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 85 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத, அரசு கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண் குழந்தைகள் உயர் படிப்புக்கு இது பயனுள்ளதாக உள்ளது. மேலும், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மிகவும் வரவேற்கத்தக்க திட்டம். ஈரோடு பகுதியில் ஏழை பெண்கள் கூலி வேலை செய்ய பஸ்சில் செல்வது வழக்கம். தற்போது இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதால் மாதம் ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை மிச்சமாகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைத்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமும் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி முதல்வர் அறிவிக்கும் திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதுதவிர, ஊழல் இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வதில் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். இதுபோன்ற நல்லாட்சி கடந்த 20 மாதமாக நடப்பதால்தான் திமுக கூட்டணி வேட்பாளர் கடந்த தேர்தலைவிட இந்த இடைத்தேர்தலில் இரண்டு மடங்கு அதிக வாக்கு பெற காரணம். இதே வெற்றியோடு, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தயாராக திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். அதேநேரம் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளதால், வரும் தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கே சில கட்சிகள் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணி பெற்ற வெற்றியால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விழிபிதுங்கி நிற்கின்றன.
