சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் பாஜ பெண் கவுன்சிலர் தர்ணா: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நாகர்கோவில்: பாஜவினர் கொலை மிரட்டல் விடுத்ததால், பாதுகாப்பு கேட்டு பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியின் 10 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கீதா. இவர் நேற்று மதியம் 12 மணியளவில் தனது கணவர் வினோத் காமராஜ் மற்றும் இரு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு  வாசலில்  திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்து விசாரித்தனர்.

அப்போது கீதா கூறுகையில், ‘நான் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனேன். இந்த நிலையில் உட்கட்சி பிரச்னையில் என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். தற்போது என்னையும், எனது கணவர் மற்றும் குழந்தைகளையும் கொன்று விடுவதாக பாஜவை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மிரட்டுகிறார்கள். கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார்கள். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என்றார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். முன்னதாக எஸ்.பி.யிடமும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

Related Stories: