×

இந்தியாவுக்கு வழிகாட்டும் ஈரோட்டு திராவிடப் பாதை: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இந்தியாவுக்கு வழிகாட்டும் ஈரோட்டு திராவிடப் பாதை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மார்ச் 1ம் நாள் என்னுடைய 70வது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்ட ஆயிரமாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும் அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம் நெகிழ்ந்தேன். என்னை வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

70 வயதில் ஏறத்தாழ 56 ஆண்டுகளை பொதுவாழ்வில் கழித்து, திமுக பணியிலும்-மக்கள் பணியிலும் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் உங்களில் ஒருவனான என்னைத் தமிழ்நாட்டு மக்கள் இன்று முதலமைச்சர் என்ற பொறுப்பில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணமான, என்னை இந்த உலகத்திற்குத் தந்த தந்தைக்கும் தாய்க்கும் முதல் நன்றி செலுத்துவதுதானே முறையானதாக இருக்கும்! அதனால்தான் பிறந்தநாளில் தலைவர் வாழ்ந்த -நான் வளர்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி, என் அன்புத் தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்துகளைப் பெற்றேன். அதுபோலவே, சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கும் சென்று தலைவர் படத்திற்கு மரியாதை செலுத்தி, ராஜாத்தி அம்மாவிடம் வாழ்த்துகளைப் பெற்றேன்.

மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் எனச் சொந்தங்களின் வாழ்த்து மழையும் சேர்ந்தே பொழிந்தது. எத்தனையெத்தனை வாழ்த்துகள்.. எவ்வளவு பேரன்பு. இன்று அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது. அதனால்தான், இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியுள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற என் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர்-சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதல்வர்- ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நமக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் எதிராக இருப்பவர்களின் சூழ்ச்சியையும் வியூகத்தையும் உணர்ந்து கொண்டு, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். காஷ்மீர் தொடங்கி ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைத்தனர். கலைஞர் இந்திய அரசியலில் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தனர். இன்றைய நிலையில் திமுக தான் இந்தியாவுக்குத் திசைவழியைக் காட்ட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டனர்.

ஒன்றுபட்ட-உறுதியான அணியாக நாம் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதையும், காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு மூன்றாவதாகப் புதிய அணி அமைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் எவ்விதப் பயனையும் தராது என்பதையும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நாம் ஓரணியாக இணைந்து நின்று பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதையும் ஏற்புரையாக மட்டுமல்ல, பிறந்தநாள் சூளுரையாகவும் தெரிவித்தேன். உடன்பிறப்புகள் திரண்டிருந்த திடலில், உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட அந்தப் பிரகடனத்தை, உங்களின் அயராத உழைப்பால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.  

தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உடன்பிறப்புகளின் கடமை. நம்முடைய உழைப்பால் உருவாகும் மகத்தான வெற்றியும், நாம் கட்டமைக்கும் கூட்டணியின் வியூகத்தால் இந்திய ஒன்றிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முழுமையான வெற்றியாக மாற்றும்.
அந்த வெற்றிக்கு முன்னோட்டமாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் நமது கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

அரசியல் எதிரிகளின் அவதூறுகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும், பொய்க் குற்றச்சாட்டுகளையும் வாக்காளர்கள் எனும் மக்கள் சக்தி மொத்தமாகப் புறக்கணித்து, திமுக அரசு மீதும், திமுக தலைமையிலான  கூட்டணி மீதும் பெரும் நம்பிக்கை வைத்து இந்த வெற்றியைத் தந்துள்ளது. பெரியாரின் பேரனான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காகக் கலைஞரின் மகனான நான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரை செய்தபோதே, இது இடைத்தேர்தல் மட்டுமல்ல,  திமுக ஆட்சியை மக்கள் மதிப்பீடு செய்யும் எடைத்தேர்தல் என்று தெரிவித்தேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சரியான முறையில் எடைபோட்டு, திமுக கூட்டணியே நாட்டுக்குத் தேவை என்பதை முடிவு செய்து, சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பிறந்தநாளில் உங்களிடமிந்து நான் பெற்ற வாழ்த்துகளையும், ஈரோடு கிழக்கு தொகுதியில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியையும் உழைப்பிற்கான வெகுமதியாக கருதுகிறேன். ஈரோட்டுப் பாதையில் தொடங்கியது தான் நம் திராவிடப் பயணம். அந்தப் பாதையில் தான் காஞ்சி தலைவனான அண்ணா, திருக்குவளையில் பூத்த கலைஞரும் பயணித்தனர். அவர்களின் இலட்சியத் தடத்தில் நம் பயணம் தொடர்கிறது. தேர்தல் களத்தில் வெற்றி முரசு கொட்டுகிறது. ‘இன்று ஈரோடு.. நாளை நம் நாடு..’ என இந்த வெற்றிப் பயணம் தொடரும்.  ஈரோடு கிழக்கைப் போல இந்தியா முழுவதும் விடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது.அதனால்தான், இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியுள்ளது.


Tags : Dravidian ,India ,Chief Minister ,M.K.Stal , Erode Dravidian Path to India: Chief Minister M.K.Stal's Letter to Volunteers
× RELATED ஜவுளித்துணி, ஆயத்த ஆடை, தோல்பொருட்கள்...