×

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் புதிய வழக்கு: எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வரும் 17ம் தேதி விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழி சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றபின் கடந்த 2017ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து, அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலிருந்து அதிமுக இரட்டை தலைமையுடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே, கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை உருவானது. இதில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடன்பாடில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி கூடியது. அதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதியாலும் தொடர்ந்து இரு நீதிபதிகள் அமர்விலும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

 உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பொதுக்குழுவில் எடப்படாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பொதுக்குழு மற்றும் தீர்மானம் தொடர்பான சிவில் வழக்குகளை இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022 ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தன்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்தது ஆகியவற்றை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், 2022 ஜூலை 11ல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது. எந்த வாய்ப்பும் தராமல் கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளனர். எனவே, கட்சியிலிருந்து நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க வேண்டும். பொதுக்குழு தீர்மானங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், வழக்கறிஞர்கள் இளம் பாரதி, சி.திருமாறன், ராஜலட்சுமி, பிரகாஷ் ஆகியோரும், எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், விஜய நாராயண் ஆகியோரும் ஆஜராகினர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடும்போது, கட்சியிலிருந்து நீக்குவது என்பது கட்சி கட்டுப்பாடுகளை மீறிய செயல். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொதுக்குழுவின் இந்த முடிவுகள் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கும் கட்சி விதிகளுக்கும் விரோதமானது. அதனால் ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்காமல் நீக்கியது சட்டவிரோதமாகும். கட்சியிலிருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.  பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. தங்களை நீக்குவது தொடர்பான எந்த அஜெண்டாவும் பொதுக்குழுவில் இல்லை. இயற்கை நீதிக்கு எதிராக தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு நிலுவையில்தான் உள்ளது. உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 23ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே நீக்கத்தை எதிர்த்து இந்த உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொதுக்குழு முடிந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் பொதுக்குழு கூட்டுவதை எதிர்த்த வழக்கு செல்லாதது என்று எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதனால் தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படி, கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டால், உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, அவர்களை நீக்க பொதுக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கடந்த 2021 டிசம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அந்த பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர தீர்மானம் கொண்டு வந்தது சட்டவிரோதமானது.

கட்சி அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றார். அப்போது அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, இந்த வழக்கில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்கவும், பதிலளிக்கவும் 2 வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதற்கு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், இடைக்கால பொதுச் செயலாளர் நியமனம் கட்சி விதிகளுக்கு புறம்பானது.  பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலையும் அறிவிக்க உள்ளனர். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, எதிர் மனுதாரர்களின் விளக்கத்தை கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால், தீர்மானங்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வேட்பாளர் தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பு விளக்கங்களை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கு குறித்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்டோர் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

* பொதுச் செயலாளர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டு அதில் போட்டியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
* பொதுக்குழுவின் இந்த முடிவுகள் கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கும் கட்சி விதிகளுக்கும் விரோதமானது.
* ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும்.
* கட்சியிலிருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை.

Tags : O. Panneerselvam ,AIADMK ,Edappadi , O. Panneerselvam's new case seeking annulment of AIADMK general committee resolutions: High court notice to Edappadi to be heard on 17th
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...