×

ஆலம்பட்டி மேம்பாலம் சேதம்; அதிர்வு ஏற்படுவதால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்: சீரமைக்க கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டியில் அமைந்துள்ள மேம்பாலத்தின் நடுவே பகுதியில் சிமென்ட் கலவை பெயர்ந்து கம்பி தெரிவதால் அதிர்வுகள் உண்டாவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து சென்று வருகின்றனர். திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி கிராமத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவழிப்பாதையாக குறுகலாக இருந்த இந்த பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மதுரையிலிருந்து ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கொல்லம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல இந்த மேம்பாலத்தை கடந்து தான் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் நடுபகுதியில் பல்வேறு இடங்களில் சிமென்ட் கலவைகள் பெயர்ந்து காட்சியளிக்கிறது. இதில் ஒரு இடத்தில் முற்றிலும் சிமென்ட் கலவை பெயர்ந்து பாலத்தின் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தை நிமிடத்திற்கு ஒருமுறை வாகனங்கள் கடந்து செல்கின்றன.

வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கில் வாகனம் செல்வதால் பாலம் தனது உறுதிதன்மையை இழந்து வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே ஆலம்பட்டி மேம்பாலத்தை உடனடியாக மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்

Tags : Alameda , Damage to Alameda flyover; Motorists fearing vibration: Requirement to repair
× RELATED தொடர் விடுமுறையையொட்டி அலைமோதிய...