×

பெண் அருள் வாக்கு கூறியதால் ஊரை காலி செய்து ஒட்டுமொத்த கிராமமும் திருப்பதிக்கு பயணம்: 16 பஸ்களில் புறப்பட்டனர்

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே, பெண் அருள்வாக்கு கூறினால், ஒட்டுமொத்த கிராமத்தையும் காலி செய்து விட்டு, திருப்பதிக்கு செல்லும் வினோத வழிபாடு நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் உள்ள மலையாண்டஅள்ளி தோட்டிபாறை, கிருஷ்ணன் கொட்டாய், புளியந்தோப்பு, கவுண்டர்கொட்டாய், கல்குட்டை, செட்டிமாரம்பட்டி, கிருஷ்ணன் கொட்டாய், உள்ளிட்ட பகுதியில், சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தையே நம்பி வாழும் இந்த கிராம மக்கள், ஆண்டுக்கு ஒரு முறையோ, நினைத்த நாளிலோ குடும்பம் சகிதமாக, திருப்பதி செல்வது கிடையாது. தனி ஒரு குடும்பம் மட்டுமே, திருப்பதிக்கு சென்று வந்ததும் இல்லை. இது அறிவிக்கப்படாத ஊர் கட்டுப்பாடாக இன்று வரை தொடர்கிறது. இந்த கிராமத்தில் உள்ள பெண்களில் யாருக்காவது சாமி வந்து, அருள் வாக்கு கூறினால் மட்டுமே, கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இவ்வாறு 3 ஆண்டுக்கு ஒருமுறை, திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. கடந்த வாரம், பெண் ஒருவருக்கு அருள்வந்து கூறியதால், கிராம மக்கள் சுமார் 16 பஸ்களில் ஒட்டுமொத்தமாக ஊரை காலி செய்து கொண்டு, நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக, கிராமங்களை சுற்றிலும் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்து, அதில் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து, திருப்பதிக்கு காணிக்கை சேமித்து வருகின்றனர். அந்த சேமிப்பு மற்றும் காணிக்கை பணத்தை எடுத்துக்கொண்டு, 3 வருடங்களுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் சென்றனர். கிராமத்தில் உள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக, கீழ் திருப்பதியில் உள்ள ஆழ்வார் குளத்தில் புனித நீராடிய பின், பூஜைகள் செய்து வழிபட்டு, பின்பு ஒன்று கூடி, அங்கிருந்து மேல் திருப்பதிக்கு செல்வார்கள். வீட்டிற்கு ஒருவர் மட்டும் கிராமத்தில் தங்கியிருந்து, கால்நடைகளை பராமரித்து வருகிறார்கள். ஆண்டாண்டு காலமாக இந்த வினோத வழிபாட்டை, மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி ஊராட்சி சிறுகலூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் அதனை சார்ந்த கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் திருப்பதிக்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். பொருளாதார சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த பயணத்தை, 80 ஆண்டுக்கு பின்பு நேற்று இரவு மீண்டும் துவக்கினர். அந்த கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் 6 பஸ்களில் திருப்பதி திருமலை பெருமாள் கோயிலுக்கு சாமி கும்பிட புறப்பட்டுச் சென்றனர். இதனால், மக்கள் நடமாட்டம் குறைந்து ஊரே வெறிச்சோடியுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘எங்களுடைய முன்னோர்கள் திருப்பதி கோயிலுக்கு வருடம்தோறும் செல்வார்கள். ஒரு கட்டத்தில் திருப்பதி கோயிலை போல், ஒரு கோயிலை தங்களது கிராமத்தில் கட்ட வேண்டும். கோயிலை கட்டி முடித்த பிறகே, திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்பது என வேண்டி கொண்டனர். அவர்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், கிராமத்தினர் சொந்த செலவில் பெருமாள் கோயிலை கட்டி முடித்து, சமீபத்தில் கும்பாபிஷேகமும் செய்து விட்டோம். இதையடுத்து, முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், 80 வருடங்களுக்கு பிறகு தற்போது ஊரே ஒன்று திரண்டு, சுமார் 300 பேர்  6 பஸ்களில் பெருமாளை தரிசித்து வர திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறோம். பெருமாள் தரிசனம் முடித்த பின்னர், வீடு திரும்பும் வரை தங்களது வீடுகளையும், கிராமத்தையும் பெருமாளே பாதுகாத்து காவல் காத்திடுவார்,’ என்றனர்.

Tags : Tirupati , As the woman vowed grace, the town was vacated and the entire village left for Tirupati: 16 buses
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...