×

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6 மண்டலங்களில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டில் 362 சாலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6 மண்டலங்களில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டில் 62.73 கி.மீ நீளத்தில் 362 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், மேயரின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புர சாலை உட்கட்டமைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதியின் கீழ் ரூ.65.07 கோடி மதிப்பீட்டில் 122.45 கி.மீ. நீளத்தில் 670 தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 6 மண்டலங்களில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டில் 62.73 கி.மீ. நீளத்திற்கு புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திருவொற்றியூர், மணலி, இராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி  மண்டலங்களில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் 45.5 கி.மீ. நீளத்தில் 334 சாலைப் பணிகளுக்கும், ரூ.18 கோடி மதிப்பீட்டில் 17.23 கி.மீ. நீளத்தில் 28 பேருந்து சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பணி ஆணை கடந்த 18.02.2023 அன்று வழங்கப்பட்டு, தற்பொழுது சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தச் சாலைகள் மற்றும் பேருந்து சாலைகள் அமைக்கப்படும்போது, ஏற்கனவே உள்ள சாலைகளின் மேற்பரப்பு முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் எனவும், சாலைகள் உரிய அளவீடுகள் மற்றும் தரத்துடன் அமைக்கப்பட வேண்டும் எனவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து மாற்றம் தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு வேலிகள் (Barricade) அமைக்கப்பட வேண்டும் எனவும், பணிகள் முடிந்தவுடன் சாலையின் தடிமன், அளவீடு சரியான அளவில் இருப்பது அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், சாலை அமைத்தல் தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Singara Chennai , Singara Chennai 2.0, Construction of 362 Roads, Municipal Administration
× RELATED சிங்கார சென்னை அட்டைகளை...