×

ஸ்ரீரங்கத்தில் தெப்போற்சவம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்றிரவு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெப்பத் திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வழிநடை உபயம் கண்டருளி வீதி உலா வருகிறார். 26ம் தேதி நம்பெருமாள் வெள்ளி கருட சேவை நடந்தது. 7ம் நாளான நேற்றுமுன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்றிரவு நடந்தது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மேல வாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் ஆஸ்தான மண்டபத்திற்கு 5 மணிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மின் அலங்காரத்தில் ஜொலித்த தெப்பத்தில் இரவு 7.30 மணிக்கு எழுந்தருளினர். நம்பெருமாள் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்த பின் மைய மண்டபத்தில் உபயநாச்சியார்களுடன்  இரவு 9.15 மணிக்கு காட்சியளித்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

அதன்பின் மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளி கரை வந்தார். அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.விழாவின் கடைசி நாளான இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு 9 மணிக்கு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார்.

பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 7 மணிக்கு ஒற்றை பிரபையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.


Tags : Temporsavam ,Srieranga , Thepposavam Kolakalam at Srirangam: A large number of devotees have a darshan
× RELATED கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீரங்கத்தில் இன்றிரவு உறியடி உற்சவம்