கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே எருக்கூர் ஆதிதிராவிடர் நல பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் சாலையோரத்தில்அரசின் ஆதிதிராவிடர் நல பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 25 வருடங்களுக்கு முன்பு இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். 10 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆரம்ப காலத்திலேயே எருக்கூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மட்டுமே அப்பகுதியில் துவக்கப்பட்டதால், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.
ஆனால் காலப்போக்கில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இன்றைய நிலையில் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஒரு சமையலர் இங்கு பணியாற்றி வருகின்றனர். அருகாமையில் உள்ள தனியார் ஆங்கில பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தப் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து படிப்பது படிப்படியாக குறைந்து இன்று விரல் விட்டு எண்ணும் வகையில் இரண்டு மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். மிக பழமையான ஓட்டு கட்டிடத்தால் கட்டப்பட்ட இந்த பள்ளி இன்றும் வலிமை மாறாமல் இருந்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளி கட்டிடத்தில் அங்குள்ள ஒரு பெரிய மரம் காற்றில் விழுந்த போது சுற்றுச்சுவரும் இடிந்து நொறுங்கியது. அதனால் இப்பள்ளி கட்டிடம் போதிய பாதுகாப்பு இன்றி உள்ளது. இங்குள்ள பள்ளி கழிவறை கட்டிடமும் பாழடைந்துள்ளது.
இங்கு படித்து வரும் இரு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பும் அவசியம் ஆகிறது. மேலும் இந்தப் பள்ளியை ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமான சூழ்நிலையில் உள்ளது. இங்கு இப்பள்ளி நடைபெறுவது நிறுத்தப்பட்டால் வருங்காலத்தில் மீண்டும் பள்ளியை இங்கு துவங்குவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. எனவே மிகவும் பழமை வாய்ந்த இப்பள்ளியை மீண்டும் சிறப்பான பள்ளியாக மாற்றுவதற்கு கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுக்க வேண்டும். உடைந்து நொறுங்கிய பள்ளி சுற்றுச்சுவரை பள்ளியின் பாதுகாப்பு கருதி மீண்டும் அமைத்து பள்ளி கட்டிடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.