×

முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் முகாம் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் முகாம் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (3.3.2023) முகாம் அலுவலகத்தில், தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் உள்ள ஒன்பது முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் முகாம் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்  இளம்பரிதி ஆகியோர் சந்தித்து, முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

1983-ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இலங்கையிலிருந்து இலட்சகணக்கான தமிழர்கள் தாய் மண்ணாம் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்தனர். அவ்வாறு தஞ்சமடைந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்டங்களில் 106 முகாம்கள் அமைக்கப்பட்டு 19,346 குடும்பங்களைச் சார்ந்த 58,245 நபர்கள் வசித்து வருகின்றனர்.

2021-ஆம் ஆண்டு மே திங்களில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பான, மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் விதமாக முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை, கல்வி உதவித்தொகை, துணிமணி மற்றும் பாத்திரங்கள் வழங்குவதற்கான தொகைகள் பன்மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு ஆண்டிற்கு 2,000 ரூபாய் மானியமும், இலவச எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் வாழ்வாதாரம் உயர்வதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், முகாம்களில் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமுதாய முதலீட்டு நிதி ரூ.75,000/- லிருந்து ரூ.1,25,000/- ஆக உயர்த்தப்பட்டதுடன், அதற்காக சுமார் 6 கோடி ரூபாய்  நிதி அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சமூக நலத்திட்டங்களும் முகாம்வாழ் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ்வதற்காக பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகள் புதிதாக கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.176 கோடி செலவில் 3510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடுதலாக செய்து கொடுப்பதற்காக ரூ.10 கோடியும், முகாம் பராமரிப்பு செலவுகளுக்கு வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியுரிமை மற்றும் சுய விருப்பத்துடன் தாயகம் திரும்புதல் போன்றவற்றிற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைச்சர் தலைமையில் ஆலோசைனைக்குழு அமைக்கப்பட்டு இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத்தரம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து வாழ்வாதார பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருவண்ணாமலை, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்பது முகாம் தலைவர்கள் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்  இளம்பரிதி ஆகியோர் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துக்களையும், நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.  

இந்நிகழ்வின்போது, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், இ.ஆப., மற்றும்  அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags : Tamil ,Nadu ,Chief Minister ,M.K.Stalin , Sri Lankan Tamils living in the camp, camp leaders, Chief Minister of Tamil Nadu M.K.Stalin, happy birthday
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...