×

ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படுமா? ஏடி காலனி, சீத்தாராம்தாஸ் நகர் மக்கள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் ஏ.டி.காலனி மற்றும் சீத்தாராம்தாஸ் நகர் பகுதியில் வாறுகால், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 30 கிராம ஊராட்சிகள் உள்ளனர். இதில் ஆண்டிபட்டி நகருக்கு அருகே தேனி-மதுரை சாலையில் அமைந்துள்ளது டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் டி.சேடபட்டி, சில்குவார்பட்டி, தேவர் சிலை, முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டிபட்டி நகரை ஒட்டியுள்ள பகுதிகளும் உள்ளடக்கி வருகிறது. ஆண்டிபட்டி நகரை ஒட்டியுள்ள சீதாராம்தாஸ் நகர், ஜே.ஜே.நகர், செல்வ விநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளது. ராஜகோபலன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதேபோல் இந்த ஊராட்சியில் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. அதேபோல் நகரை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் பல்வேறு தொழில்களும், தனியார் நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப்பகுதி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இந்த டி.ராஜகோபாலன்பட்டியில் பல்வேறு கிராமங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். சாலை வசதி, கழிவுநீர் வாறுகால் வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதில் தேனி-மதுரை சாலையில் அமைந்துள்ள ஏ.டி.காலனி பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். இந்தப் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வழி வசதி இல்லாததால் அங்கு குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அங்கு ஏ.டி.காலனியில் இருந்து ராஜகோபாலன்பட்டி பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.

அங்குள்ள பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிறைந்தததால் தற்போது சாலையில் ஓரத்தில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் துர்நாற்றத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் கழிவுநீர் தேங்கி இருப்பதாலும், அதில் கொசுக்கள், புழுக்கள் உருவாகுவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு ஊராட்சி நிர்வாகம் வழிவகை செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி நகரை ஒட்டி அமைந்துள்ள சீத்தாராம்தாஸ் நகர் பகுதியில் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு கழிவுநீர் வாறுகால் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவர்களது வீட்டருகே பள்ளம் தோண்டி அதில் கழிவுநீரை தேக்கி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருவிளக்கு இல்லாததால் அந்தப்பகுதி இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் காணப்படுகிறது.

இதனால் அங்கு பூச்சிகள், விஷ பாம்புகள் போன்றவை வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் விளையாடுவதற்கும் சிரமம்படுகின்றனர். சாலை வசதி இல்லாததால் இங்கு குழந்தைகள், வயதானவர்கள் நடந்து செல்வதற்கும் கடினமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அவசர காலங்களில் ஆட்டோக்கள் வந்து செல்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் எந்தஒரு அடிப்படை வசதிகளும் செய்துதராமல், வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. பின்னர் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி பணிகளையும் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளும், அடிப்படை வசதிகளும் தீவிரமான வேகத்தில் நடந்து வருகிறது. எனவே டி.ராஜகோபாலன்பட்டி பகுதியிலும் அடிப்படை வசதிகள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : D.Rajagopalanpatti ,Andipatti ,AD Colony ,Sitharamdas Nagar People Expectation , Will all basic facilities be fulfilled in D.Rajagopalanpatti near Andipatti? AD Colony, Sitharamdas Nagar People Expectation
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...