×

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதல்வருமான கான்ராட் சங்மா ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார்!!

ஷில்லாங் :  மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆட்சி நடக்கிறது. ஷில்லாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) வேட்பாளர் லிங்டோ மாரடைப்பினால் காலமானதால், 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.இங்கு கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜ, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்நிலையில், இங்கு நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், என்பிபி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 5 இடங்களிலும், பாஜ 2, யுடிபி 11 இடங்களிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

மேகாலயாவை பொருத்தவரை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை நீடித்தது. இதையடுத்து ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி பாஜகவிடம் கான்ராட் சங்மா கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கியது. இதனால் மேகாலயா மாநில கூட்டணி ஆட்சியிலும் பாஜக இணைந்து கொள்கிறது. இந்த நிலையில்  மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதல்வருமான கான்ராட் சங்மா ஆட்சியமைக்க உரிமை கோரினார். முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பாகு சவுகானிடம் வழங்கினார் கான்ராட் சங்மா. 


Tags : Meghalaya ,National People's Party ,Chief Minister ,Conrad Sangma ,Governor , Meghalaya, National People's Party, Conrad Sangma
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு