ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளில் தற்போது அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நகரின் எல்லைப் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் குப்பைகளை பலரும் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என நகராட்சி தரப்பில் பலமுறை எச்சரித்தும் பலரும் இரவு நேரங்களில் குப்பைகள் கொட்டுவதை தொடர்கின்றனர். இதையடுத்து நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நடவடிக்கையின்படி நகர் எல்லை பகுதிகளுக்குள் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் வேண்டுகோளை அடுத்து சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுபோன்ற பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வது கடினம் என பல்வேறு தரப்பினும் கூறுகின்றனர். எனவே இதுபோல் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், ராஜபாளையம் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் தரப்பில் வாகனங்கள் உதவியுடன் உணவகங்கள், திருமண மண்டபங்கள், குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் பெறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நகராட்சிக்கு எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் சிலர் வேண்டுமென்றே குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நேரங்களில் இதுபோல் கொட்டப்படும் குப்பைகள் மீது பலரும் தீ வைக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் அதிகரிக்கிறது. வழக்கமாக தென்காசி சாலையில் இதுபோன்ற நிகழ்வு தொடர்கதையாகி வருகிறது. இந்த புகை மூட்டத்தால் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இதுபோல் தொடர்ச்சியாக குப்பைகளை விதிமீறி கொட்டுவோரை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாக உள்ளது என்றனர்.