விருதுநகர்: ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்பதை உறுதி செய்யும் வகையில் விருதுநகரை சேர்ந்த குடும்பத் தலைவிகளான தீபா மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர், ஆட்டோ டிரைவராகவும் இருந்து சாதனைப் பெண்களாக வலம் வருகின்றனர். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மாரிக்கனி. ஆட்டோ டிரைவரான இவரது மனைவி தீபா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தீபா தன் கணவருக்கு இணையாக வீட்டின் அருகிலேயே இருக்கும் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த பணியை இவர் தேர்வு செய்ததற்கான காரணம் சோகம் நிறைந்தது. இதுகுறித்து தீபா கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு என் கணவரின் ஆட்டோவில் பனிக்குடம் உடைந்த நிலையில் சென்ற கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. அப்போது உடன் வந்த மூதாட்டி பதட்டத்தில் இருந்ததால் அப்பெண்ணிற்கு உதவுவதற்காக கணவர் என்னை அழைத்தார்.
அப்போது ஆணாக இருப்பதால்தான் அவரால் அந்த பெண்ணிற்கு உதவ முடியவில்லை என உணர்ந்தேன். இதனால் நானும் ஆட்டோ ஓட்ட விரும்பினேன். கணவர் கற்றுக்கொடுத்து ஒரு ஆட்டோவும் வாங்கிக்கொடுத்தார். வழக்கமாக சவாரி செல்வதுடன் இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் என் ரெகுலர் கஸ்டமர்களாக உள்ளனர் என்றார். எனக்கு ரெகுலராக பள்ளி செல்லும் டிரிப் கிடையாது. ஆனால் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அந்த பணிகளை மேற்கொள்வேன். காலை 8 மணிக்கு ஸ்டாண்டுக்கு செல்லும் நான் 11 மணிக்கு பின் வீட்டிற்கு சமைக்க வருவேன். அடுத்து பிற்பகல் 3 முதல் 5 மணி வரை ஆட்டோ ஓட்டுகிறேன். பின் மாலையில் என் குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பேன். வீட்டில் சமையல் செய்யும்போது அழைப்பு வந்தால் அடுப்பை ஸ்டாப் செய்து விட்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்து விடுவேன். ஏனெனில் சாப்பாட்டைவிட சவாரிதான் முக்கியம் என்கிறார் இந்த அசாத்திய பெண்மணி.
மேலும் மற்ற ஆட்டோ டிரைவர்களை தங்களுக்கு சமமாகவே என்னையும் கருதுகிறார்கள். வழிகாட்டிகளாகவும் உள்ளனர். திருட்டு, வழிப்பறி போன்ற பயம் ஏதும் இல்லை. ஏனெனில் நான் காக்சி சட்டை போட்டிருக்கிறேன். இதற்கு தனி மரியாதை உள்ளது. பொதுவாக ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்பதாக புகார் வருகிறது. ஆனால் நான் அப்படி அல்ல. டீசல் விலை ஏறிப்போச்சு... பார்த்து கொடுங்க சார்... என கூறுவேன். அதனை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பெண்கள் மட்டுமின்றி குடும்பத்தினருடன் வந்தால் ஆண்களையும் ஆட்டோவில் ஏற்றுவேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாக கூறுவர். ஆனால் என் வெற்றிக்கு பின்னால் என் கணவர் உள்ளார் என்றார். அடுத்து, அதே ஆட்டோ ஸ்டாண்டில் அசத்தும் கிருஷ்ணவேணி கூறியதாவது: ரோசல்பட்டி அரண்மனை தெருவில் வசிக்கும் நான் 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். கணவர் காளிமுத்து சுமை தூக்கும் தொழிலாளி. ஆட்டோ டிரைவராக வேண்டும் என எங்கள் தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் அழகேந்திரன் என்பவரிடம் கூறினேன். அவர் கற்றுக்கொடுத்ததோடு ஆட்டோ வாங்க கடனும் ஏற்பாடு செய்தார். காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரை ஸ்டாண்டில் இருப்பேன். பின் சமையல் செய்ய செல்வேன். அடுத்து 4 முதல் 6 மணி வரை ஆட்டோவே கதியென இருப்பேன். தூரத்திற்கு ஏற்ப கட்டணம் பெறுவேன். நான் கேட்பதை விட கூடுதலாக கொடுத்தால் வாங்க மாட்டேன். உள்ளது போதும்... எக்ஸ்டிரா வேண்டாம்... ஸ்டாண்டில் மற்றவர்கள் சவாரிகளை பகிர்ந்து அளிக்கிறார்கள். தெரியாத இடத்திற்கு அவர்களிடம் வழி கேட்பேன். எவ்வளவு வாங்கலாம் என்றும் கேட்டுக்கொள்வேன். அவர்கள் எனக்கு உதவுகிறார்கள் என்றார். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே ஆட்டோ ஓட்டும் பெண்களை பார்த்துள்ள பலரும் விருதுநகர் வீதிகளில் ஆட்டோவில் வலம் வரும் தீபா மற்றும் கிருஷ்ணவேணியை அதிசயப் பெண்களாக பார்க்கின்றனர். உழைப்பு மட்டுமே உயர்வளிக்கும் என்பதற்கு இவர்களும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.