சென்னை :சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து வழங்கப்பட்ட போலி கௌரவ டாக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகிவிட்டார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தனியார் அமைப்பு விழா நடத்தியது. இந்த விழாவில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கியது.
இந்த விழாவுக்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். பின்னர் தான் இந்த கௌரவ டாக்டர் பட்டம் போலி என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரியவந்தது. அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்தார். அதாவது, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை கொடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடத்த அனுமதி வாங்கி விட்டனர் எனவும், அதே போல் அண்ணா பல்கலைக்கழக பெயரை கூறி வள்ளிநாயகம் அவர்களையும் அந்த கும்பல் ஏமாற்றி சிறப்பு விருந்தினராக வரவழைத்து விட்டனர் எனவும் குற்றம் சாட்டினார் துணை வேந்தர் வேல்ராஜ்.
அதன் பிறகு, இந்த போலி கௌரவ டாக்டர் பட்ட விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளோம் எனவும், மேலும், தமிழக உயர்கல்வி துறையிலும் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், இந்த விழாவினை ஏற்பாடு செய்த விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் தற்போது தலைமறைவாகி உள்ளார் . அவரை தேடும் பணியில் கோட்டூர்புரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போலி டாக்டர் பட்ட விவகாரம் குறித்து 7 பிரிவுகளில் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
