×

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி ஆட்சி அமைக்க 'ரெண்டு சீட் 'கொடுத்து பாஜக ஆதரவு : மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

ஷில்லாங் :  மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆட்சி நடக்கிறது. ஷில்லாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) வேட்பாளர் லிங்டோ மாரடைப்பினால் காலமானதால், 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.இங்கு கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜ, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.இந்நிலையில், இங்கு நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், என்பிபி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 5 இடங்களிலும், பாஜ 2, யுடிபி 11 இடங்களிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.

மேகாலயாவை பொருத்தவரை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை உள்ளது. இதையடுத்து அங்கு பாஜ மற்றும் வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தனிபெரும் கட்சியான என்பிபி முயற்சி செய்தது.இதனிடையே, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தனது டிவிட்டரில், ``மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்பு கொண்டு அங்கு ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மேகாலயாவில் அடுத்து என்பிபி தலைமையிலான ஆட்சி அமைய ஆதரவு அளிக்கும்படி மாநில பாஜ தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்று கூறி இருந்தார்.

இதனையடுத்து 2 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, மேகாலயாவில் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் வழங்கி உள்ளது. இதனால் மேகாலயா மாநில கூட்டணி ஆட்சியிலும் பாஜக இணைந்து கொள்கிறது. இது தொடர்பாக பேசிய தேசிய மக்கள் கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான கான்ராட் சங்மா,மேகாலயாவில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.கடந்த முறை ஆளும் கூட்டணியில் இடம் பெற்று இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களை கைப்பற்றிய நிலையில், இன்னும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.  திரிபுராவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக. நாகாலாந்திலும் பாஜக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : National People's Party ,Meghalaya ,Bajaja ,Conrad Sangma , Meghalaya, National People's Party, BJP, support
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு