×

3வது சுற்றில் வெளியேறிய அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நேற்று காலை வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்ற மையத்துக்கு வந்திருந்தார். முதல் 3 சுற்றுகளில் பெரும் பின்னடைவு சந்தித்தார். இந்த மூன்று சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 2, 3 மடங்கு அதிகமாக வாக்குகள் பெற்றதால் அதிர்ச்சியடைந்து, தனி காட்டு மரமாக நின்றிருந்த அவர் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே திடீரென வெளியேறி, வேகமாக புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

* ஈவிகேஎஸ்சுக்கு மோதிரம் பரிசு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சம்பத், தேர்தல் பணிமனைக்கு வந்து தங்கமோதிரம் பரிசளித்தார்.


* விசைத்தறி நெசவாளர்கள் பகுதியில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்கு

திமுக தலைமை அறிவிப்பின்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகர், அம்மன் வீதி, அசோகபுரம், வீரப்பன் சத்திரம் பகுதிகளுக்கு உள்பட்ட 22 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். இந்த வார்டுகளில் 11,980 வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கு வெறும் 2,700 வாக்குகளும் மட்டுமே கிடைத்துள்ளது. வித்தியாசம் 9,280. இப்பகுதி விசைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதும், எதிர்க்கட்சியினர் விமர்சித்ததைபோல மின் கட்டண உயர்வால் திமுக கூட்டணிக்கு வாக்குகள் கிடைப்பதில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



* எம்ஜிஆர்-ஜெயலலிதா படங்களின் முன் ஓபிஎஸ் அணியினர் ஒப்பாரி

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, இரட்டை இலை சின்னம் கிடைத்தும் படுதோல்வியை சந்தித்தார். இதையடுத்து விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு கங்கையம்மன் கோயில் தெருவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து ஓபிஎஸ் அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று ஒப்பாரி வைத்தனர். அப்போது, ‘‘எடப்பாடியால் கட்சி போச்சே. கட்சியை ஒன்று சேருங்கள் அம்மா. எடப்பாடி பதவி விலக வேண்டும். ஓபிஎஸ் தலைமையில் கட்சியினர் ஒன்று கூட வேண்டும்’’ என்று கூறி அவர்கள் ஒப்பாரி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


* நோட்டா ஓட்டு குறைந்தது

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நோட்டாவுக்கு 1546 ஓட்டுகள் விழுந்தது. இது 1.02 சதவீதம் ஆகும். ஆனால் தற்போது நோட்டாவுக்கு 797 ஓட்டுக்கள் மட்டுமே விழுந்துள்ளன. இது 0.4 சதவீதம்தான். இதனால் கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 749 ஓட்டுக்கள் குறைவாகவே விழுந்துள்ளன.


* அமமுகவை முந்திய தேமுதிக

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி.தினகரனின் அமமுகவும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில், அமமுக 1204 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றது. இந்த தேர்தலில் அமமுக போட்டியிடுவதாக அறிவித்தார் தினகரன். ஆனால் திடீரென்று வேட்பாளரை வாபஸ்பெற்றார். இதனால் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்தார். இந்த தேர்தலில் தேமுதிக 1432 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக பெற்றதை விட
228 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளது.



Tags : AIADMK , AIADMK candidate who dropped out in the 3rd round
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...