×

இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி எதிரொலி எடப்பாடி கனவு கோட்டை தகர்ந்தது: ஓபிஎஸ்-சசிகலா அணியினர் உற்சாகம் மீண்டும் கட்சியை கைப்பற்ற வாய்ப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா மரணம்  அடைந்ததையொட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் இரட்டை இலையில்  நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் என்றும்  ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பையும் எடப்பாடி  பழனிசாமி நிராகரித்து விட்டார். ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக  சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தென்னரசுவை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்று  எடப்பாடி கடந்த ஒரு மாதமாக சேலம் மற்றும் ஈரோட்டில் தங்கி இருந்து கட்சி  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கட்சியின் முன்னணி  நிர்வாகிகள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி,  சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரும் கலந்து  கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள்  தங்கி இருந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். வாழ்வா சாவா போராட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவினர்  பிரசாரம் செய்தனர். பிரசாரத்துக்கு மட்டும் அதிமுகவினர் சுமார் ரூ.50 கோடி  வரை செலவு செய்ததாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். பாஜ  மாநில தலைவர் அண்ணாமலையும் ஈரோடு சென்று பிரசாரம் செய்தார். சிறுபான்மையினர் வாக்குக்காக அண்ணாமலையை  எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து தனித்து பிரசாரம் செய்து வந்தார்.


இந்த  பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே திமுக கூட்டணி  சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  முன்னணியில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு முதல் சுற்றிலேயே கடும்  பின்னடைவை சந்தித்தார். வாக்கு எண்ணிக்கை இறுதியில் இதில் காங்கிரஸ்  வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் வாங்கி அபார வெற்றி  பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு வெறும் 43,981 வாக்குகள் மட்டுமே  பெற்று படுதோல்வி அடைந்தார்.அதிமுக வேட்பாளர் படுதோல்வியால் எடப்பாடி  பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு  மாவட்டம் கொங்கு கோட்டை, அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று  அதிமுகவினர் கூறி வந்தனர். தனது சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் எடப்பாடி  தனியாக கடிதம் எழுதி வாக்கு கேட்டார். ஆனாலும், அதிமுக வேட்பாளர்  படுதோல்வியை தான் சந்தித்துள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி நேற்று  வெளியே எங்கும் வராமல் வீட்டிலேயே முடங்கினார். இந்த தோல்வி மூலம்,  எடப்பாடி பழனிசாமியின் கனவு கோட்டை தகர்ந்துள்ளது. ஜெஅதேநேரம்  எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட இந்த படுதோல்வியால் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் சசிகலா அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். வரும் நாட்களில் இருவரும்  இணைந்து அதிமுகவை கைப்பற்ற மீண்டும் முயற்சி செய்வார்கள் என்றே  கூறப்படுகிறது. இனியாவது, எடப்பாடி பழனிசாமி தனது நிலையில் இருந்து இறங்கி  வந்து, அதிமுகவில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து கட்சியை  வழிநடத்தி செல்ல வேண்டும் என்கின்றனர் தொண்டர்கள்.

* அதிமுக அலுவலகம் வெறிச்சோடியது ஈரோடு  கிழக்கு தொகுதியில் அதிமுக முதல் சுற்றில் இருந்தே படுதோல்வி அடைந்து  ெகாண்டிருந்தது. டெபாசிட் வாங்க 28,320 வாக்குகள் பெற வேண்டும். தட்டுத்தடுமாறி இந்த இலக்கை அதிமுக இந்த தேர்தலில் தாண்டி உள்ளது. அதிமுக  படுதோல்வி அடைந்ததால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை  அலுவலகத்தில் ஒரு அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்கள்கூட நேற்று வரவில்லை. இதனால் கட்சி அலுவலகம் காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது.


Tags : Edabadi , AIADMK's resounding defeat in by-elections shatters Edapadi's dream line: OPS-Sasikala team upbeat Chance to take over the party again
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்