சென்னை: தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று, அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த வடிவேல் கோபால் மற்றும் மாசி சடையன் ஆகியோருக்கு, ஒன்றிய அரசு பத்ம விருது வழங்க உள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சார்பாக பத்ம விருது பெற உள்ளவர்களுக்கு சென்னேரி கிராமத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி பிரதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இருவரும் அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும்போது எடுத்த புகைப்படங்களை பார்வையிட்டார். பாராட்டு விழாவில் ஆளுநர் பேசுகையில், ‘‘இந்தியாவில் பல இடங்களில் பாம்பு கடி பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால், இவர்களால் தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என பெரும்பாலானோருக்கு தெரியாது. அது வருந்தததக்கது. இதனை ஒரு தொழிலாக பாவித்து அதனை அங்கீகரிக்க வேண்டும், அவர்களுக்கான மரியாதையை பெற்று தர வேண்டும். இருளர்களுக்கு மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.