×

அண்ணா பல்கலை கழகத்தை பயன்படுத்தி மோசடி என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு டாக்டர் பட்டம் தயாரித்த நபர்கள் மீது நடவடிக்கை: முன்னாள் நீதிபதி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் விழா நடத்தியவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம்

சென்னை: பட்டமளிப்பு விழாவிற்கு எனது கையெழுத்தை போலியாக போட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மோசடி செய்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாம்பலம் காவல் நிலையத்தில், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.சென்னையில், கடந்த 26ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் சார்பில் திரைப்பட நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, சின்னத்திரை நடிகர்கள் என 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்குவது போல், பல்கலைக்கழக முத்திரையுடன் மிக பிரமாண்டமாக டாக்டர் பட்டம், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் வழங்கினர். அந்த, டாக்டர் பட்டத்தை ஆய்வு செய்தபோது, அது போலியானது என்றும், டாக்டர் பட்டத்துக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்தது. இந்த, போலி பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் பதிவாளர் ரவிகுமார் கவனத்துக்கு சென்றது. அதுகுறித்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாக குழு மூலம் விசாரணை நடந்தது. அதில்,  அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியது தெரியவந்தது.


அதைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ரவிக்குமார் நேற்று முன்தினம் கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தார். அதில், சென்னை கே.கே.நகர் காமராஜர் ெதருவை சேர்ந்த ஹரிஷ்  என்பவர், தன்னை சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணைய நிறுவனர் என்று கூறி, கடந்த நவம்பர் 10ம் தேதி பல்கலைக்கழக முதல்வரை சந்தித்துள்ளார். அப்போது, எங்கள் அமைப்பு சார்பில், பிப்ரவரி 26ம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக அரங்கை வாடகைக்கு வழங்க வேண்டும் என்று கேட்டார். முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு ஹரிஷ், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் வழங்கியதாக, அரசு முத்திரையுடன் கூடிய கடிதத்தை பல்கலைக்கழக முதல்வரிடம் கொடுத்துள்ளனர். நீதிபதியே அரங்கத்தை கேட்பதால், நிகழ்ச்சி நடத்த முதல்வர் வழங்கினார். விழா நடத்தியதில், மோசடி செய்து இருப்பது சமூக வலைத்தளங்கள் மூலம் எங்கள் கவனத்துக்கு வந்தது. எனவே, கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்தோம்.

இதற்கிடையே, போலி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் வழங்கிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம், நேற்று முன்தினம் இரவு மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.அந்த புகாரில், முன்னாள் நீதிபதி என்ற அடிப்படையில் பல்வேறு விழாக்களில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன். அதேபோல் தான் சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் நிறுவனர் ஹரிஷ் என்பவர், தன்னை அணுகி, எங்கள் அமைப்பு சார்பில் விருதுகள் வாங்க உள்ளோம். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைத்து இருந்தார். அதன் அடிப்படையில் நானும் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டேன்.

பின்னர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மூலம், சில தகவகள் எனக்கு தெரியவந்தது. குறிப்பாக எனது கடிதம் மற்றும் கையெழுத்தை போலியாக தயாரித்து அதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில், விழா நடத்துவதற்கு மோசடி அனுமதி வாங்கியது தெரியவந்தது. இதன் மூலம் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.எனவே, மோசடியாக ஆவணங்களை தயாரித்த ஹரிஷ் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்தவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் அளித்துள்ளார்.போலி டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் நிறுவனர் ஹரிஷ் மற்றும் அதன் அமைப்பினர் மீது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.  இதையடுத்து நிகழ்ச்சியை நடத்திய ஹரிஷ் உள்ளிட்டோர், போலீசார் கைது செய்ய கூடும் என்பதால் அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், போலி டாக்டர் பட்டம் வாங்கிய சினிமா பிரபலங்கள் உட்பட 50 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Tags : Anna University , Action against those who used Anna University to fake my doctorate and fake my signature: Police are keen to arrest those who staged a sensational complaint ceremony at the ex-judge police station.
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்