விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு

புதுடெல்லி:‘விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை’ என்று ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்தார்.டெல்லி விக்யான் பவனில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் 2 நாட்கள் நடக்கும் மாநாட்டைத் தொடங்கி வைத்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: ஒன்றிய அரசின் உதவியுடன் பாலியல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கத்தில் விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.போக்சோ மற்றும் பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ஒன்றிய சட்ட அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும், 389 போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களைத் தொடங்க கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவெடுக்கப்பட்டது.ஆனால், இத்திட்டத்தின் கீழ் 28 மாநிலங்களில் 769 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், 418 போக்சோ நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டு 1 லட்சத்து 37 ஆயிரம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.வழக்குகளை விரைந்து முடிப்பதில், நீதித்துறையும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும். சில மாநிலங்களில், உயர்நீதிமன்றங்கள் மற்றும் அரசுக்கு இடையேயான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. இதனால் விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை.இவற்றின் ஒட்டு மொத்த செயல்திறனை அதிகரிக்க விசாரணை அமைப்புகள் மற்றும் தடயவியல் ஆய்வகங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: