×

இடைத்தேர்தல் முடிவுகள்மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அதிரடி வெற்றி

புதுடெல்லி:சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் காங்கிரஸ்  வேட்பாளர்கள் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளனர்.3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேசத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.மேற்கு வங்காள மாநிலம் சாகர்டிகி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சுப்ரதா சகா கடந்த ஆண்டு டிசம்பரில் காலமானார். இதனால், அங்கு நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் பேரான் பிஸ்வாஸ் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் திலீப் சகாவை அதிரடியாக 22,980 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்ல.

இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் போட்டியிட்டது. தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி ஒழுக்கக் கேடானது என்று விமர்சித்தார். பாஜ ஆதரவை மறைமுகமாக காங்கிரஸ் பெற்றதாகவும் அவர் கூறினார்.மகாராஷ்டிராவில், புனே மாவட்டத்தில் உள்ள கஸ்பா பேட் தொகுதியில், பாஜ பெண் எம்எல்ஏ மறைவால் இடைத்தேர்தல் நடந்தது. இந்த முறை உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் காங்கிரஸ் களமிறங்கியது. அந்த கட்சியின் வேட்பாளர் ரவீந்திர டாங்கேகர் பாஜ வேட்பாளர் ரசானேவை 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக பாஜதான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் நடந்த மற்றொரு தொகுதியான சிஞ்ச்வாட்டில் பாஜ வேட்பாளர் அஸ்வினி லட்சுமண் ஜெகதாப் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரை வென்றார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் இடைத்தேர்தலில் பாஜ கூட்டணி கட்சியான ஏஜெஎஸ்யூ கட்சி வேட்பாளர் சுனிதா 21,970 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். காங்கிரஸ் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்த இடைத்தேர்தல் நடந்தது. அதில் தொகுதியை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் லும்லா தொகுதி இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர் சியாம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


Tags : Congress ,West Bengal, Maharashtra , By-election results: Congress wins in West Bengal, Maharashtra
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...