காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் ஏழை எளிய மக்களின் துயரத்தை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: இந்தியாவில் பாஜ ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அடிக்கடி உயர்ந்து கொண்டே இருந்த காஸ் சிலிண்டரின் விலை மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப் பேரவை தேர்தல் அறிவிப்பையொட்டி உயர்த்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்ததையடுத்து தற்போது மீண்டும் காஸ் விலை உயர தொடங்கியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் ரூ.351 உயர்த்தப்பட்டு ரூ.2,268க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில், இந்த விலைவாசி உயர்வு அடித்தட்டு மக்களில் தலையில் இடியாக விழுந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

* கலையரசி (32), காய்கறி வியாபாரி, ஆவடி:

அன்றாடம் காய்கறி விற்று பிழைப்பு நடத்தி வருகிறோம். கிடைக்கும் வருவாய் குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவுக்கே போதுமானதாக இல்லை. ஏற்கனவே காஸ் விலை ஆயிரம் ரூபாயை கடந்து விற்கப்படும் நிலையில், தற்போது ஒன்றிய அரசு மேலும் விலையை உயர்த்தி உள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளோம். ஏற்கனவே சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலிண்டர் விலையை குறைப்போம் என ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசு தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது. வரும் தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

* ஜீவிதா, குடும்ப தலைவி, மவுத்தம்பேடு:

ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்காக முழு மூச்சாக பாடுபடும் ஒன்றிய அரசு, ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. எனவே, ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

* செல்வி, இல்லத்தரசி, திருவேற்காடு:

சமையல் காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வு சாதாரண, நடுத்தர மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு அதிகரித்து வரும் நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு கடுமையாக பாதிக்கும்.

ஒன்றிய அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.

* முனியம்மாள், குடும்ப தலைவி, புழல்:

ஒன்றிய பாஜ அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை மற்றும் காஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த காங்கிரஸ் காட்சியில் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவினர் தற்போது அதை விட பல மடங்கு விலையை உயர்த்தி உள்ளனர். இதனால் ஏழை, எளிய மக்கள் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, சிலிண்டரை உபயோகிக்காமல் பழையபடி விறகு அடுப்பை பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* க.உஷா, இல்லத்தரசி, பெரியகுப்பம்:

ஏழை முதல் பணக்காரன் வரையிலும் அத்தியாவசிய தேவையாக இருப்பது காஸ் சிலிண்டர். ஆடம்பர பொருட்கள், எல்க்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களின் விலை உயர்த்தினால் பாதிப்பு பெருமளவு ஏழை எளிய மக்களுக்கு இருக்காது. ஆனால், தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்த்தி இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதே நிலை நீடித்தால் ஒன்றிய அரசு மீதான எதிர்ப்பலை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால் அடுத்த தேர்தலில் இதன் பிரதிபலிப்பு எதிரொலிக்கும்.

* சாந்தி, இல்லத்தரசி, பெரியபாளையம்:

எங்களை போன்ற ஏழை எளிய மக்கள் காஸ் சிலிண்டரை பயன்படுத்தும்போது சந்தோஷமாக இருந்தோம். நடுத்தர மக்கள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டரை நாமும் பயன்படுத்துகிறோமே என்ற மகிழ்ச்சி இருந்தது. ஆனால், அடிக்கடி சிலிண்டர் விலை ஏறும்போதெல்லாம் காஸ் சிலிண்டரே வேண்டாம் என தோன்றுகிறது. 10 வருடத்திற்கு முன்பு 350 ரூபாயாக இருந்த சிலிண்டர் தற்போது 1,170 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வாடகை வீட்டில் விறகு அடுப்பை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். இப்படி அடிக்கடி விலையை உயர்த்தினால் குறைந்த வருவாயில் வாழும் மக்கள் என்ன செய்வார்கள் என்று ஒன்றிய அரசு கவலைப்படுவதே இல்லை.

* வேணுகோபால்ராஜ், மாவட்ட விவசாய சங்க தலைவர்:

வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக அவதிப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை உயரும். ஒன்றிய அரசு உடனடியாக விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

* ரஞ்சிதம், இல்லத்தரசி, கடம்பூர்:

காங்கிரஸ் ஆட்சியில் காஸ் விலை விஷம்போல் ஏறிவிட்டதாக குற்றம்சாட்டி ஆட்சிக்கு வந்த பாஜ, தற்போது பல மடங்கு காஸ் விலையை உயர்த்தி உள்ளது. இதன்மூலம் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை உயரும், கூலி தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவர். ஏழை, எளிய மக்களின் துயரத்தை ஒன்றிய அரசு மதிப்பதே இல்லை. இதற்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.

Related Stories: