×

மாமல்லபுரத்தில் மாசிமக தீர்த்தவாரி விழாவுக்காக கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வரும் 7ம் தேதி நடக்கவுள்ள மாசிமக தீர்த்தவாரிக்காக கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இதில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மாமல்லபுரத்தில் மாசிமக தீர்த்தவாரி இருளர் இன மக்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான இருளர் இன மக்கள் தீர்த்தவாரிக்கு 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்து விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்வார்கள்.

அவர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடி தங்களது பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என இரவு முழுவதும் பௌர்ணமி வெளிச்சத்தில் கடற்கரையில் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்தநிலையில், வரும் 7ம் தேதி காலை மாசிமக தீர்த்தவாரி திருவிழா நடக்க உள்ளது. மேலும், மாசிமக தீர்த்தவாரிக்காக இங்கு வரும் இருளர் இன மக்கள் வசதிக்காக, பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோரின் உத்தரவின்பேரில், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஒன்றிணைந்து மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Maasimaga Theerthavari festival ,Mamallapuram , Beach cleaning for Maasimaga Theerthavari festival at Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ