×

செவிலிமேடு அருகே பாலாறு மேம்பால இணைப்புகளில் மீண்டும் பள்ளம்: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: செவிலிமேடு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் உள்ள இணைப்புகளில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சீரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் பாலாற்றில், களக்காட்டூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு ஓரிக்கை கீழ் சாலை, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு செவிலிமேடு மேல் சாலை ஆகிய இரண்டு பகுதிகளில் தலா 1 கிமீ நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் சாலை வழியாக அதாவது செய்யாறு, வந்தவாசி சாலை மிகவும் பிரதான சாலையாக அமைந்துள்ளது.

இந்த சாலை வழியாக செய்யாறு, வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, திருச்சி, சேலம், ராமேஸ்வரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், செய்யாறு சிப்காட்  தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள், ஏராளமான வாகனங்கள் இந்த பாலம் வழியாக கடந்து செல்கின்றன. மேலும், புஞ்சையரசன்தாங்கல், அப்துல்லாபுரம், தூசி, மாமண்டூர், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால் அதிகளவில் டூ வீலர்களில் வந்து செல்கின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு, அதிகளவில் பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த  தொழிற்சாலைகளுக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் இந்த சாலை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், பாலத்தின் இணைப்பு பகுதிகளில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் பல இடங்களில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டு அச்சுறுத்தும் வகையில், இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன.  இதனால், வாகனங்கள் சேதமடைவதுடன், டூவீலரில் செல்வோர் அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.

ஏற்கனவே, பாலாற்று பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால், இரவில் நைட் ஷிப்ட்  வேலைக்கு செல்லும் தனியார் கம்பெனி இளைஞர்கள் இந்த பாலத்தை கடக்கும்போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்வதுபோல் அச்சத்துடனேயே கடக்க வேண்டியுள்ளது என்கின்றனர். இந்நிலையில், இது குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நமது தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, போலீஸ் எஸ்பி சுதாகர் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு சீரமைக்க உத்தரவிட்டனர்.

எனவே, அந்த இடத்தில் தார் கலவை ஊற்றி தற்காலிகமாக சரிசெய்யப்பட்ட நிலையில் 1 மாதத்திற்கு உள்ளாகவே மீண்டும், அந்த பகுதி மிக ஆபத்தான நிலையில் பாலத்தின் கான்கிரீட், தார் பெயர்ந்து எலும்புக்கூடு போல காட்சியளித்தது. இதனால், அப்பகுதியில் மீண்டும் தார் ஊற்றி தற்காலிகமாக சரிசெய்யப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் மீண்டும் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியில் துருத்திக் கொண்டு, பெரிய இடைவெளியுடன் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து சேதமடைந்துள்ள பாலாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palaru ,Sevilimedu , Another pothole in Palaru flyover links near Sevilimedu: Motorists demand repairs
× RELATED புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்