தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை போலீசார் சஞ்சீவிராயன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து செல்லும்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பேசினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. பின்னர் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், ஒருவர் வண்ணாரப்பேட்டை நரசய்யா தெருவைச் சேர்ந்த மனோஜ் (21) என்பதும், பிரபல கல்லூரியில் எம்பிஏ படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் தருண் (19) என்பதும், அவர் வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்து வருவதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவரான சையத் யாசின் (21), மாதவரம் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் வியாசர்பாடி சஞ்சய்நகர் 6வது தெருவைச் சேர்ந்த மோகன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,800 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
