இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் டெபாசிட்டே வாங்காத நாம் தமிழர் கட்சி: தொண்டர்கள் சோர்வு

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தலில் போட்டியிட்டும் இதுவரை 2வது இடம்கூட பிடிக்க முடியாமல் நாம் தமிழர் கட்சி திணறி வருவதால் சோர்வு அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சீமானால் 2010ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி தொடங்கப்பட்டது. 2016ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் அதாவது நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வருகிறது. 2016ம் ஆண்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு மொத்தமாக 4,58,104 வாக்குகள் (1.07 சதவீதம்) பெற்று 9வது இடத்தை பிடித்தது.

இதையடுத்து 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 3,802 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்தது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 2.63 சதவீத வாக்குகள் பெற்று பின் தங்கியது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தமாக 31,08,906 வாக்குகள் (6.72 சதவீதம்) பெற்று 3வது இடத்தை பிடித்தது. கடந்த 2021ம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கோமதி 11,629 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2021ம் ஆண்டு தேர்தலைவிட குறைந்த வாக்குகள் அதாவது, 10,804 வாக்குகள் பெற்று 3வது இடத்தைதான் பிடித்தது. கட்சி தொடங்கியதில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. ஆனாலும் 3வது அல்லது 4வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிகிறது. குறைந்தபட்சம் 2வது இடத்தைகூட அக்கட்சியால் பிடிக்க முடியவில்லை. இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட டெபாசிட் வாங்காததால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.

Related Stories: