×

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று முதல் நாக் அவுட் சுற்று: முதல் ஆட்டத்தில் பெங்களூர்-கேரளா மோதல்

பெங்களூர்: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 9வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 11 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து 6 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதல் 2 இடங்களை பெற்ற  மும்பை சிட்டி எப்சி, ஐதராபாத் எப்சி அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுகளில் விளையாட உள்ளன. அடுத்த 4 இடங்களை பிடித்த  ஏடிகே மோகன் பகான், பெங்களூர் எப்சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, ஒடிஷா எப்சி அணிகள் நாக் அவுட் சுற்று மூலம் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதனால் பெங்களூரில் இன்று நடக்க உள்ள முதல் நாக் அவுட் சுற்றில்  பெங்களூர்- கேரளா அணிகளும், கொல்கத்தாவில் நாளை  நடைபெறும் 2வது நாக் அவுட் சுற்றில் ஏடிகே-ஓடிஷா அணிகளும் மோதும். இன்று நடைபெறும்  முதல் நாக் அவுட் சுற்றில், லீக் சுற்றில் 4, 5 வது இடங்களை பிடித்த பெங்களூர், கேரளா அணிகள் மோதுகின்றன.  அறிமுகமான 2018 ஆண்டே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி அசத்திய அணி பெங்களூர். கூடவே 2019ம் ஆண்டு முதல் முறையாக கோப்பையையும் வென்றது. இந்திய அணியின் கேப்டன் சுனில், அதிரடி வீரர் ராய் கிருஷ்ணா, ஹர்மன்பிரீத் , சென்னை வீரர் சிவநாரயணன் ஆகியோர் அணிக்கு கூடுதல் பலம்.

அதே நேரத்தில் கேரளா அணி முதல் தொடரிலேயே(2014) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி மிரட்டிய அணி.  அதுட்டுமல்ல  2016ம் ஆண்டும் இறுதி ஆட்டத்தை தொட்ட அணி. கூடவே டிராவில் முடிந்த கடந்த ஆண்டு ஐஎஸ்எல் பைனலை, பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஐதராபாத்திடம் இழந்தது. இந்த முறை ரூய்வா, டிமித்ரி, பிரபாசுகன், பிரவீன் என பலரும் அணிக்கு அவ்வப்போது கை கொடுத்து வருகின்றனர். அதனால் இந்த முறை எப்படியும் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. எனவே  ஆட்டத்தில் அனல் பறக்கப்போவது நிச்சயம்.

* நேருக்கு நேர்
ஐஎஸ்எல் தொடரில் இந்த 2 அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அவற்றில் பெங்களூர் 7-3 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்து விட்டன.

* நடப்புத்தொடரில்..
இந்த தொடரில் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் டிச.11ம் தேதி கேரளா 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரை வீழத்தியது. தொடர்ந்து பிப்.11ம் தேதி நடந்த 2 சுற்று லீக் ஆட்டத்தில் பெங்களூர் 1-0 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தது.

* கடைசியாக...
லீக் சுற்றில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் பெங்களூர் வென்று உள்ளது. கேரளா கடைசியாக விளையாடிய 5ல் ஒன்றில் மட்டுமே வென்றது. கூடவே வெளியூரில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் கேரளா தோற்க, சொந்த ஊரில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் பெங்களூர் வெற்றி வாகை சூடியுள்ளது.


Tags : ISL Football Series ,Bangalore ,Kerala , ISL Football Series First Knockout Round Today: Bangalore-Kerala clash in the first match
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை