குன்றத்தூர்: பல்லாவரம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் காவல் நிலையத்தில், போலீசாரின் வாகன சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டன. நீண்ட நாட்கள் ஆகியும் அவற்றை, உரிய ஆவணங்கள் காண்பித்து அதன் உரிமையாளர்கள் மீட்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இவ்வாறு, சுமார் 96 மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடந்தன. அவை அதிகளவு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தாம்பரம் காவல் மாவட்ட தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், குன்றத்தூர் காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள் முதல் கட்டமாக பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டு, மார்ச் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி நகலுடன் ரூ.500 செலுத்தி, மார்ச் 20ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்து கொள்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள உரிமை உண்டு. ஏலம் முடிவடைந்ததும், அதன் முழு தொகையையும் அன்றே செலுத்தி வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம்.