மதுராந்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுந்தர் எம்எல்ஏ வழங்கினார். மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி மதுராந்தகம் அரசினர் மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் சத்தியசாய் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ஆறுமுகம், ஒன்றிய துணை செயலாளர்கள் தனசேகரன், சியாமளா திருஞானசெல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் தமிழரசன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசுப் பெட்டகம் வழங்கினார். மதுராந்தகம் நகரமன்ற தலைவர் மலர்விழிகுமார், நகரச்செயலாளர் குமார், மதுராந்தகம் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்.சிவக்குமார், கருங்குழி பேரவை செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், ஒன்றியச் செயலாளர் தம்பு தலைமையில் எல்.எண்டத்தூர் பேருந்து நிலையம் அருகில் கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
