திருப்போரூர்: கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் காவல் நிலையங்களில், கேட்பாரற்று கிடக்கும் பழைய வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது என காவல் உதவி ஆணையர் ரவிக்குமரன் தெரிவித்துள்ளார். கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரவிக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லையில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 92 இரு சக்கர வாகனங்கள், கானத்தூர் காவல் நிலையத்தை சேர்ந்த 6 இரு சக்கர வாகனங்கள், தாழம்பூர் காவல் நிலையத்தில் 91 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 189 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களுடைய அடையாள அட்டை, ஜிஎஸ்டி பதிவு எண் ஆகியவற்றுடன் வருகிற 13ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கேளம்பாக்கம் காவல் நிலையத்திலும், 14ம் தேதி தாழம்பூர் காவல் நிலையத்திலும் முன்பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மார்ச் 16 மற்றும் 17ம் தேதிகளில் அந்தந்த காவல் நிலையங்களில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம். அன்றைய தினம் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான ஏலத்தொகையை அன்றே முழுமையாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
