×

அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள்; நல்ல தீர்வு விரைவில் வரும்: வி.கே. சசிகலா அறிக்கை..!

சென்னை: அதிமுகவினர் இடைத்தேர்தல் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் நம்பிக்கையோடு இருங்கள்; நல்ல தீர்வு விரைவில் வரும் என வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் அதிமுகவினருக்கு வி.கே. சசிகலா ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டு மக்களும் அதிமுக ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் கழகம் இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். எனவே, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கிணங்க, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை நமது இரு பெரும் தலைவர்களுக்கும் சமர்பிப்போம்.

தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு நம் தலைவர்கள் கொடுத்த அதே பொற்கால ஆட்சியை விரைவில் அமைப்போம். இது உறுதி. எனவே அதிமுக தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன். நாளை நமதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : sasigala , AIADMK don't get discouraged by the by-election defeat and stay hopeful; Good solution will come soon: VK Sasikala report..!
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...