×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி எதிரொலி: எடப்பாடி கனவு கோட்டை தகர்ந்தது; ஓபிஎஸ்-சசிகலா அணியினர் கொண்டாட்டம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததன் எதிரொலியால், எடப்பாடி அணியினரின் கனவு கோட்டை தகர்ந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் கொண்டாட்டம் அடைந்துள்ளதுடன், மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்த சரியான தலைமை இல்லாததால் ஒவ்வொரு தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் அணி என தனித்தனியாக பிரிந்து செயல்பட்டனர். ஆனாலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டு எடப்பாடி முதல்வராக இருந்ததால் கட்சியையும், ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து கொண்டே தனித்து செயல்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ஓ.பன்னீர்செல்வம் தன்னை செயல்படவிடாமல் தடுக்கிறார். அதனால்தான் அதிமுகவில் எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை (பொதுச்செயலாளர்) பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி கோரிக்கை வைத்தார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் எடப்பாடி தனியாக பொதுக்குழுவை கூட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்தே நீக்கினார். நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையொட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனால் இரட்டை இலை கிடைக்காது என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பஞ்சாயத்து பேசி, அதிமுகவினர் ஒற்றுமையாக செயல்பட்டு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றார். ஆனால், அவரது சமரசத்தை எடப்பாடி ஏற்க மறுத்து விட்டார். நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார். வாபஸ் பெற வைத்ததுடன், அதிமுக சார்பில் இரட்டை இலையில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பையும் எடப்பாடி நிராகரித்து விட்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தென்னரசுவை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்று எடப்பாடி கடந்த ஒரு மாதமாக சேலம் மற்றும் ஈரோட்டில் தங்கி இருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் எடப்பாடி பழனிசாமி 5 நாட்கள் தங்கி இருந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார். காரணம், இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அல்லது அதிக வாக்குகள் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமியும் அவரது அணியினரும் தள்ளப்பட்டிருந்தனர். இதனால் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவினர் பிரசாரம் செய்தனர். பிரசாரத்துக்கு மட்டும் அதிமுகவினர் சுமார் ரூ.50 கோடி வரை செலவு செய்ததாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் ஈரோடு சென்று பிரசாரம் செய்தார்.

அவரையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து தனித்து பிரசாரம் செய்து வந்தார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், முதல் சுற்றில் இருந்தே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தென்னரசு முதல் சுற்றில் இருந்த கடும் பின்னடைவை சந்தித்தார். இன்று காலை 11 மணிக்கு நிலவரப்படி 3 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26,431 வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தென்னரசு வெறும் 9,217 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னணியில் இருந்தார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் தென்னரசு தொடர்ந்து கடும் பின்னடைவையே சந்தித்தார். இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி உறுதியாகி உள்ளது. அதேபோன்று அதிமுக வேட்பாளர் படுதோல்வி அடைவதும் உறுதியாகி உள்ளது.

அதிமுக வேட்பாளர் படுதோல்வியால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஈரோடு மாவட்டம் கொங்கு கோட்டை, அதிமுகவுக்கே வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அதிமுகவினர் கூறி வந்தனர். ஆனால், அங்கேயே படுதோல்வி அடைந்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி இன்று வீட்டிலேயே முடங்கினார். இந்த தோல்வி மூலம் எடப்பாடி பழனிசாமியின் கனவு கோட்டை தகர்ந்துள்ளனது. இனி அதிமுகவில் தனது செல்வாக்கை எப்படி நிரூபிக்க முடியும்? என்ற கலக்கத்தில் உள்ளார். இந்த தோல்வி வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி, பாஜ உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் எடப்பாடி அணியினரின் இந்த தோல்வியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வரும் நாட்களில் இருவரும் இணைந்து அதிமுகவை கைப்பற்ற மீண்டும் முயற்சி செய்வார்கள் என்றே கூறப்படுகிறது. இனியாவது, எடப்பாடி பழனிசாமி இறங்கி வந்து, அதிமுகவில் அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் உட்கட்சி மோதல் மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் வாக்கு விவரம் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடாமல் அதிமுக கூட்டணி கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தமாகா வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அப்போது வெறும் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலே தமாகா தோல்வி அடைந்தது.

தற்போது சுமார் 40 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாக எடுத்து அதிமுக தோல்வி அடையும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த 2016ம் ஆண்டு இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது, தென்னரசு 57,085 வாக்குகள் பெற்று 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதிமுக அலுவலகம் வெறிச்சோடியது ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக முதல் சுற்றில் இருந்தே படுதோல்வி அடைந்து ெகாண்டிருந்தது. இதனால் வாக்கு வித்தியாசம் பல ஆயிரங்களை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. டெபாசிட் வாங்க 28,320 வாக்குகள் பெற வேண்டும். அதனால் தட்டுத்தடுமாறி இந்த இலக்கை அதிமுக தாண்டிவிடும் என்றே கூறப்படுகிறது. அதிமுக படுதோல்வி அடைவது உறுதியானதால் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு அதிமுக நிர்வாகி மற்றும் தொண்டர்கள்கூட இன்று வரவில்லை. அதனால் கட்சி அலுவலகம் காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது.



Tags : AIADMK ,Erode East ,Edappadi ,OPS ,Sasikala , AIADMK defeat in Erode East by-election reverberates: Edappadi dream fortress collapsed; OPS-Sasikala team celebration
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்