சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறை கூவலின் படி, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் மேற்கொள்ளும் கே.எஸ்.அழகிரி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் என மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்ேகாவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியானது மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதி 2 ஆண்டுகளுக்குள் 80 சதவீதத்துக்கும் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்தோம். எங்களை எதிர்த்து நின்ற அதிமுக, சஞ்சலத்தில் இருக்கிறார்கள். அவர்களால் அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். எங்களின் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
பிறந்த நாள் பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகக் கூடாது, காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சந்தர்ப்பவாதத்தை உருவாக்கும்’ என அவர் கூறி இருப்பது கல்லில் பதிக்க வேண்டிய முத்தான கருத்துக்கள். இதனை அவர் ஒரு அறைகூவலாக, பிரகடனமாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த கருத்து இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் மேற்கொள்ளும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருவது வழக்கம். ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. ஆனால், எதற்கு பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படுகின்றன என்பதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அவரது பொருளாதார அணுகுமுறை என்ன, அவருக்கு இருக்கும் பொருளாதார உதவியாளர்கள் என்ன பாடம் எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. எனவே, பிரதமர் தான் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
