சென்னை: மெரினா பகுதியில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் மற்றும் மெரினா பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மெரினா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று மாட்டாங்குப்பம் மற்றும் மெரினா பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பல்லவன் சாலை எஸ்.எம்.நகரை சேர்ந்த ஷெரிப்(எ)முஸ்தபா(19) என தெரியவந்தது. இவன், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மெரினா பகுதிகளில் இரவு நேரங்களில் பைக்கில் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஷெரிப்(எ)முஸ்தபாவை கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
