×

களக்காடு அருகே வாழை தோட்டங்களுக்குள் உலா வரும் கரடி: 150க்கும் மேற்பட்ட வாழைகளை சாய்த்தது

களக்காடு: களக்காடு அருகே வாழை தோட்டங்களுக்குள் கரடி உலா வருவதால் விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் மூலம் புலி, சிறுத்தை, யானை, காட்டு எருமை, காட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு வாழும் வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சமீபகாலமாக காட்டு பன்றி, கடமான், கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் தங்களது விளைநிலங்களை பாதுகாக்க இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி ஒருவர் இரவு நேர காவல் பணிக்கு சென்ற போது அங்கு பதுங்கியிருந்த கரடி அவரை துரத்தியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனால், இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்கு செல்லவே விவசாயிகள் அஞ்சும் நிலை ஏற்படுகிறது. இந்த கரடியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், வனத்துறையினர் கரடியை விரட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாழை தோட்டங்களுக்குள் கரடி உலா வருவதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
களக்காடு அருகே மஞ்சுவிளை பாலம்பத்து பத்துகாட்டில் உள்ள வாழைத் தோட்டங்களுக்குள் இரவில் கரடி சுற்றி திரிகிறது. மேலும் கரடி வாழைகளையும் நாசம் செய்து வருகிறது.

கடந்த 1 வாரத்தில் 150க்கும் மேற்பட்ட ஏத்தன் ரக வாழைகளை கரடி சாய்த்து சேதப்படுத்தியுள்ளது. இந்த வாழைகள் மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த ராமசாமி மகன் முருகன் (41), மஞ்சுவிளையை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் பிரைசன் (45), தாமஸ் மகன் தங்கராஜ் (50), ஆகியோர்களுக்கு சொந்தமானது. கரடி நடமாட்டத்தால் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
எனவே வாழை தோட்டங்களுக்குள் உலா வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும், வனவிலங்குகள் நாசம் செய்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோலார் மின்வேலி அமைக்கப்படுமா?: இதுகுறித்து மஞ்சுவிளையை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் சிம்சோன் துரை, விவசாயி சில்கிஸ் கூறுகையில், மழையையும், வெயிலையும், பனியையும் பாராமல் விவசாயிகள் இரவு பகலாக வயல்களில் பாடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உடல் நலமும் பாதிக்கப்படும் நிலையில் வனவிலங்குகளாலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க தோட்டங்களை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



Tags : Kalakadu , Bear wanders into banana plantations near Kalakadu: Over 150 bananas gobbled up
× RELATED களக்காடு அருகே குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு