×

நாகர்கோவிலில்; குப்பை கிடங்கு தீயை அணைக்க 2 வது நாளாக போராட்டம்: 55 தீயணைப்பு வீரர்கள் சுழற்சி முறையில் பணி

நாகர்கோவில் : நாகர்கோவில் குப்பை கிடங்கில் நேற்று 2 வது நாளாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். நாகர்கோவில் பீச் ரோடு வலம்புரிவிளை குப்பை கிடங்கில், நேற்று முன் தினம் காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி குப்பை கிடங்கு முழுவதும் தீ பற்றியது. அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. அனைத்து கழிவுகளும் எரிந்ததால், துர்நாற்றமும் வீசியது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டன.
தீ விபத்து குறித்து அறிந்ததும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்றனர். மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்தமோகன் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர். நேற்று முன் தினம் இரவு வரை போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு மீண்டும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மீண்டும் குப்பை கிடங்கிற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 வது நாளாக நேற்று இரவு வரை தீயை அணைக்கும் பணி நடந்தது. நாகர்கோவில் மட்டுமின்றி திங்கள்சந்தை, கன்னியாகுமரியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
55 வீரர்கள் சுழற்சி முறையில் அந்த பணியில் ஈடுபட்டனர். தீ ஒரு புறம் அணைக்கப்பட்டாலும் மறுபுறம் பிடித்தது. ஜேசிபி எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறி தீயை அணைக்கும் பணி நடந்தது. தீ விபத்து காரணமாக அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டது தேர்வு இருப்பதால் 10, 11, 12 வகுப்பு மாணவ மாணவிகள் மட்டும் வர வைக்கப்பட்டு இருந்தனர்.



Tags : Nagarkovil , In Nagercoil; 2nd day of struggle to douse dump fire: 55 firefighters on duty in rotation
× RELATED புனித வெள்ளி, வார விடுமுறையை...