திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்: ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் குடைவறை வாயில் தீபாராதனை

திருச்செந்தூர்: புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவையொட்டி அதிகளவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இக்கோயிலில் நடக்கும் பல்வேறு முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

இந்தாண்டு மாசித் திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவில் 5ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி குமர விடங்க பெருமானுக்கும்,தெய்வானை அம்பாளுக்கும் குடைவறை வாயில் தீபாராதனை நடைபெற்றது.

பழமையான இக்கோவிலில் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஸ்வாமியும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 5ம் நாளான நேற்று குடைவறை வாயில் தீபாராதனை நடைபெற்றது. இதில் தங்க மயில் வாகனத்தில் குமர வடங்க பெருமானும், அம்பாளும் வீற்றிருந்த போது பந்தல் மண்டப முகப்பில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அப்போது ஒரே நேரத்தில் மூன்று தெய்வங்களுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரவசத்துடன் வழிபட்டனர்.

Related Stories: