உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தை வெல்லப்போவது யார்?... வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!!

ஷில்லாங்:  மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல், வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவதையொட்டி, 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதுவரை எதிர்எதிராக களத்தில் நின்ற காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திரிபுராவில் சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடந்தது. இவ்விரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் உள்ளன. இதில் இரு மாநிலத்திலும் தலா 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது.

மேகாலயாவில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. இங்கு ஆளும் தேசிய மக்கள் கட்சியை (என்பிபி) எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) கட்சிகள் போட்டியிடுகின்றன.  இங்கு காங்கிரஸ், பாஜ கட்சிகள் 59 தொகுதிகளிலும், என்பிபி 56 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 57 தொகுதிகளிலும் யுடிபி கட்சி 46 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

நாகலாந்திலும் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. இங்கு, ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் (என்டிபிபி) பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. நாகா மக்கள் முன்னணியுடன் (என்பிஎப்) காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 81.94 சதவீத வாக்குகள் பதிவாகின.

Related Stories: