×

ஆஸ்திரேலியாவில் போலீசாரை கத்தியால் குத்த முயற்சி தஞ்சாவூர் வாலிபர் சுட்டுக்கொலை

தஞ்சாவூர்: ஆஸ்திரேலியாவில் போலீசாரை கத்தியால் குத்த முயன்ற தஞ்சாவூர் பட்டதாரி வாலிபர் சுட்டுகொலை செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று சிட்னி. இங்கு தமிழ்நாடு உள்பட இந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் பகல் 12.30 மணிக்கு சிட்னி மேற்குப்பகுதியில் உள்ள அபர்ன் ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரயில் நிலையத்தில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த நபரை, ஒருவர் கத்தியால் குத்தினார்.

தகவலறிந்த வந்த ரயில்வே போலீசார், கத்தியால் குத்திய நபரை  பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர் போலீசாரையும் கத்தியால் குத்த முயன்றதோடு ஆக்ரோஷமாக கத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 போலீசார், அந்த நபரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபரின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். தாக்குதலில் காயமடைந்த தூய்மை பணியாளர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர  சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் இறந்தவர் யார்? என விசாரணை நடத்தியதில், இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுமனை தெருவை சேர்ந்த செய்யது அகமது மகன் முகமது ரகமத்துல்லா சையது அகமது(32) என்பதும், பிஎஸ்சி கணினி அறிவியல் படித்துள்ள இவர் கடந்த 2019 டூரிஸ்ட் விசாவில் ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள புட் பேக்டரியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரது தந்தை செய்யது அகமது இறந்துவிட்டார். தாய் மற்றும் அண்ணன், ஒரு தங்கை உள்ளனர். அண்ணன் அப்துல் கனி சென்னையில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார்.

இதுபற்றி இந்திய துணை தூதரகம் தரப்பில் கூறியதாவது:
இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. வெளியுறவு மற்றும் நியூசவுத் வேல்ஸ் அலுவலக காவல்துறை அதிகாரிகளுடன் இதுபற்றி கேட்டு வருகிறோம். அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம்’ என்றனர்.

இதுகுறித்து சகோதரர் அப்துல் ஆலிமிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ‘செய்யது அகமது குற்றவாளி என்பதால், அவரது உடல் ஆஸ்திரேலியாவில் அடக்கம் செய்யப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Tags : Thanjavur ,Australia , Australia, Attempted stabbing, Thanjavur youth shot dead
× RELATED வாக்கு பதிவான இயந்திரங்கள் பூட்டி...