×

எர்ணாவூரில் மாநகராட்சி சார்பில் ரூ.52 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்: 10 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு

திருவொற்றியூர்:  எர்ணாவூரில் மாநகராட்சி சார்பில் ரூ.52 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதன் மூலம் மக்களின் 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் 4வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் மணலி விரைவு சாலையை  இணைக்கும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியின்போது 10 ஆண்டுகளாக இந்த சாலை பராமரிக்கப்படாமல் கிடப்பில் விட்டதால் பழுதடைந்து குண்டும் குழியுமானது. இதனால் சாலையில் குடிநீர், ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் வார்டு கவுன்சிலர் ஜெயராமன் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று பழுதடைந்திருந்த இந்த சாலையை மாநகராட்சி சார்பில் ரூ.52 லட்சம் செலவில் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கவுன்சிலர் ஜெயராமன் முன்னிலையில், செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தார் சாலை அமைக்கும் பணியை நேற்று காலை தொடங்கினர்.

Tags : Ernavur , Construction of tarred road at Rs 52 Lakhs on behalf of Municipal Corporation in Ernavur: Resolution of 10-year demand
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்