×

பெங்களூரு- ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

சென்னை: பெங்களூரு-ஓசூர் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு தமிழ்நாட்டின் ஓசூர் ஆகிய நகரங்கள் அருகருகே அமைந்திருப்பதால், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இரு நகரங்களுக்கும் பயணிக்கின்றனர். தொழில் நகரமான ஓசூரில் இருந்து பெங்களூருவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான முன் முயற்சியை தமிழ்நாடு அரசு மூன்று மாதத்திற்கு முன்பு எடுத்தது.

அந்த வகையில், பொம்மசந்திரா மற்றும் ஓசூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் மற்றும் ஒப்பந்த புள்ளி தயாரிப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. பெங்களூரு -ஓசூர் இடையே மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிப்பதற்காக ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. 20.5 கிலோ மீட்டர் நீளமுள்ள திட்டத்தில் தமிழ்நாட்டில் 8.8 கிலோ மீட்டரும், கர்நாடகாவில் 11.7 கிலோமீட்டரும் அமைய உள்ளது.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகரத்தை பெங்களூருவுடன் இணைக்கும் திட்டத்திற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த கட்டமாக விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணி தொடங்கும்.

விரைவில் கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான முயற்சியில் இரு மாநில அரசுகளும் இறங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தென்னிந்தியாவில் முதன்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ள வழித்தடமாக ஓசூர்- பெங்களூரு மெட்ரோ ரயில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags : Union Government , Bengaluru-Hosur Metro Rail Project, Union Govt approves
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...