×

நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணி 2 மாதத்துக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் இன்னும் 2 மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்தார். தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113க்குட்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் பகுப்பாய்வுக்கூடம் மற்றும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயராக இருந்தபோது 7.4.2000ம் ஆண்டு ஏப்ரல் 7ம்தேதி தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் தற்போது, சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட மேம்பாடுகள், உட்கட்டமைப்பு பணிகள், புதிய அறைகள் உருவாக்குதல், புதிய இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தை திறந்து வைத்தார்.

பிறகு அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் 70வது பிறந்த நாளில், அவரது பெயரில் இருக்கிற இந்த மருத்துவமனையில் புதிதாக 7 படுக்கைகள் டயாலிசிஸ் செய்யும் வகையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் முழு உடல் பரிசோதனை செய்கின்ற அனைத்து வசதிகளும் இருக்கிறது. மொத்தம் 91 படுக்கைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 380 நோயாளிகள் டாயாலிசிஸ் பண்ணுவதற்கு வசதி உள்ளது. இப்போது, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக 15 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக பைப் லைன் கனெக்‌ஷன் வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 240 மில்லியன் லிட்டர் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த அளவை அதிகப்படுத்தும் வகையில், பைப் லைன் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இடையில் 2 கி.மீ., தூரம் மட்டுமே பைப் லைன் போட வேண்டிய பணி உள்ளது. அந்த பணியை முடிப்பது குறித்து  தேசிய நெடுஞ்சாலையோடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அது முடிந்து அவர்கள் அனுமதி தந்தால் நாள் ஒன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியில் சென்னை குடிநீர் தேவைக்கு கொடுக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடுவோம். சென்னையில் இதுவரை நடந்து முடிந்த மழைநீர் வடிகால் திட்ட பணிகள், இனி நடக்க வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டு, இந்த ஆண்டே இத்திட்ட பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான நிதியை கேட்டு ஆணையர் முன்மொழிவு அளித்துள்ளார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டு தொடர்ந்து இந்த பணிகள் நடைபெறும். சென்னையில் கொசு ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், டாக்டர் நா.எழிலன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,  கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், கவுன்சிலர்கள் பிரேமா சுரேஷ், எலிசபெத் அகஸ்டின், டேங்கர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*கோடையில் குடிநீர் தட்டுப்பாடுக்கு வாய்ப்பே இல்லை கடந்த ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டு  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளது. எனவே,  சென்னையை பொறுத்தவரை கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வரும் என்பதற்கான  வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.Tags : Nemmeli ,Minister ,KN Nehru , Nemmeli 150 million liter desalination project to make drinking water will be completed within 2 months: Minister KN Nehru informs
× RELATED நெம்மேலி குப்பத்தில் மீன் பிடி...