×

உபி. ரயில் குண்டுவெடிப்பு வழக்கு 7 பேருக்கு மரண தண்டனை: லக்னோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட 7 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை தயாரித்து, பரிசோதித்ததன் அடிப்படையில், முகமது சைபுல்லா என்பவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2017 மார்ச் 7ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் முகமது பைசல், கவுஸ் முகமது கான், முகமது அசார், ஆதிபர் முசாபர், முகமது டானிஷ், சையது மீர் ஹூசைன் மற்றும் ஆசிப் இக்பால் என்ற ராக்கி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, போபால்-உஜ்ஜைனி ரயிலில் வெடி குண்டு வைத்ததாக மறுநாள் வழக்கு பதியப்பட்டது. பின்னர், தீவிரவாத தடுப்பு போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு 6 நாட்களுக்கு பிறகு என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் மீது என்ஐஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. உபி.யில் இவர்கள் இருந்த பகுதிகளில் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், மின்னணு
சாதனங்கள், பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கும் புகைப்படங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவர்கள் மீதான வழக்கு லக்னோவில் உள்ள என்ஐஏ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. புனிதப் போர் என்ற பெயரில் வகுப்பு மற்றும் மத கலவரங்களை தூண்டுவது, பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சட்ட விரோத ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும் அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி, ரயிலில் வெடி குண்டு வைத்ததாகவும் அதில் 10 பேர் காயமடைந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், 7 பேருக்கு மரண தண்டனையும் முகமது ஆதிப்பிற்கு மட்டும் ஆயுள் தண்டையும் வழங்கி தீர்ப்பு வழங்கியது. அதே போல், குஜராத்தில்  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத  அமைப்புக்கு ஆள் சேர்த்த இரண்டு சகோதரர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை  விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



Tags : Lucknow , UP. Death sentence for 7 people in train blast case: Lucknow special court in action
× RELATED சில்லி பாயின்ட்…