35 ஆண்டாக சிறையில் இருக்கும் இலங்கை தமிழர் விடுதலை தமிழக அரசு பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் கோரிக்கை மனுவை தமிழக அரசு 3 வாரத்தில் பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கக்கோரி கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை மனு அளித்திருந்தார். ஆனால் அந்த மனுவை கடந்த 2021ல் தமிழக அரசு நிராகரித்தது.

இதைத்தொடர்ந்து தன்னை சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கக்கோரி ராஜன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய் ஒஹா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் மனுதாரர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்று தெரியவருகிறது. அதனால் அவரின் சிறை நன்னடத்தையை கருத்தில் கொண்டு மனுதாரர் வைத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு மூன்று வாரத்துக்குள் மீண்டும் பரிசீலிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர். அதேவேளையில் இந்த இடைப்பட்ட காலத்தில் மனுதாரரை உரிய முகாமிற்கு தமிழக அரசு மாற்ற வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: