தேர்தல் ஆணையம் ஒரு போலி அமைப்பு; மக்களை முட்டாளாக்கும் ஆணையம் என அதை அழைக்க வேண்டும்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு..!

மும்பை: தேர்தல் ஆணையம் மீது முன்னாள் மகராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே கடுமையாக தாக்கியுள்ளார். முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் மும்பையில் மராத்தி மொழி தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மூத்த வக்கீல் கபில் சிபில் கூறியது சரியாக உள்ளது. சிவசேனா தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டு இருக்கும் போது, அதில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையம் ஒரு போலி அமைப்பு. மக்களை முட்டாளாக்கும் ஆணையம் என அதை அழைக்க வேண்டும்.

பா.ஜனதாவுக்கு சாதகமாக எல்லாம் நடக்கின்றன. மொகம்போ வம்சாவளியினர் (அமித்ஷா) எத்தனை பேர் வந்தாலும் சிவசேனாவை அழிக்க முடியாது. சட்டத்தை பின்பற்ற வேண்டும் என குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிகொடுக்காவிட்டால், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை திருடிச்செல்வார்கள். எனவே திருடர்கள் பற்றி நான் அதிகம் பேசவிரும்பவில்லை. அவர்கள் அதற்காக வெட்கப்படமாட்டார்கள். சிவசேனா வெறும் பெயர், சின்னம் மட்டுமல்ல. வில், அம்பு மட்டும் சிவசேனா அல்ல. சிவசேனா நம்முடையது. அதை யாராலும் திருட முடியாது. பால் தாக்கரே விதைத்ததை நீங்கள் எப்படி நீக்க முடியும்.

யாராலும் சிவசேனாவை அழிக்க முடியாது. உங்களுக்கு தைரியம் இருந்தால், திருடிய சிவசேனா பெயர், வில், அம்புடன் தேர்தல் களத்துக்கு வாருங்கள். 2024 தேர்தல் தான் நாட்டில் நடக்கும் கடைசி தேர்தல் என எல்லோரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். மராத்தி தினத்தில் கவர்னர் சட்டசபையின் இரு அவைகளில் இந்தியில் உரையாற்றுகிறார். இது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: