×

இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல, இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல. இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; மு.க.ஸ்டாலின் எனும் நான் நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன். ஸ்டாலின் என்பது நான் மட்டும் அல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அந்தப் பெயருக்குள் உள்ளனர்.

எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று கூறினார்களோ, அதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கூறியவர் அண்ணா. மக்களின் கவலைகளை தீர்க்கும் தலைவனாக இருப்பேன் என உறுதி பூண்டுள்ளேன். அண்ணாவை போல் பேச தெரியாது, கலைஞரை போல் எழுதத் தெரியாது, ஆனால் அவர்களைப் போல் உழைக்கத் தெரியும். பொது வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென, வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப்பது போல சிறைக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். மார்ச் 1 பிறந்த நாள் என்று கூறும்போதுதான் எனக்கு என் வயதே நியாபகம் வரும். எனக்கு 70 வயது என்று சொல்லும் போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

என் வயதை கூகுளில் பார்த்த பிறகே ராகுல் காந்தி நம்பினார். 70 வயது ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை; மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் கிடையாது. எல்லாம் நேற்று நடந்தது போல் தோன்றும்; ஆனால் என்னுடைய பயணம் நெடிய பயணம். திமுகவை நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன். நான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை: கொள்கையை பரப்ப கட்சி, கொள்கையை நிறைவேற்ற ஆட்சி, இந்த இரண்டின் வழியாக தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம். தேர்தல் அறிக்கையில் வழங்கிய 505 வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றியுள்ளோம்; எஞ்சிய வாக்குறுதிகள் ஓராண்டில் நிறைவேற்றப்படும்.

மகாபாரத்தில் சூதாட்டம் இருக்கிறது என்பதால் தடை செய்ய மறுக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய முதல்வர்; எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல, இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதே முக்கியம். பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.


Tags : Chief Minister BC ,G.K. Stalin , This is not my birthday party public forum. A New Inauguration Ceremony for Indian Politics: CM Stalin's Speech
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...