×

ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தினை  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-113க்குட்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் பகுப்பாய்வுக்கூடம் மற்றும் இரத்தச் சுத்திகரிப்பு நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வணக்கத்திற்குரிய மேயராக இருந்த போது 07.04.2000 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தில் தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.37 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிட மேம்பாடுகள், உட்கட்டமைப்புப் பணிகள், புதிய அறைகள் உருவாக்குதல், புதிய இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மையம் மற்றும் டயாலிசிஸ் மையத்தினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (01.03.2023) திறந்து வைத்து, புதிய டயாலிசிஸ் இயந்திரங்களின் செயல்பாட்டினைத் தொடங்கி வைத்தார்.

மேலும், அமைச்சர் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் முழு உடல் பரிசோதனை நடவடிக்கைகளைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, இம்மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்கிட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த மையத்தில் ஏற்கனவே இரத்தப் பரிசோதனைகள் இ.சி.ஜி, ஸ்கேன், ஊடுகதிர், சளிப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை முதலிய பரிசோதனைகள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இம்மையம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 4,86,000 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இம்மையத்தின் முதல்தளத்தில், Tanker Foundation என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக 17 இயந்திரங்கள் கொண்டு இரத்த சுத்திகரிப்பு மையம் இயங்கி வருகிறது.  இந்த இரத்தச் சுத்திகரிப்பு மையத்தில் இதுவரை 192 பயனாளிகள்  பயன்பெற்றுள்ளனர்.  48,750  முறை இரத்தச் சுத்திகரிப்பும்  செய்யப்பட்டுள்ளன.  தற்பொழுது புதிதாக 5 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து அவை பிரத்யேகமாக Hepatitis B and C நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே வழங்கப்படும் முழு உடல் பரிசோதனை சேவைகளுடன் கூடுதலாக உடல் பரிசோதனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஒருங்கிணைந்த முழு உடல் பரிசோதனை நிலையமாக தற்பொழுது தரம் உயர்த்தப்பட்டு மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி,  கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர்கள் பிரேமா சுரேஸ், எலிசபெத் அகஸ்டின் மற்றும் டேங்கர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,K.K. ,Full Physical Examination Centre ,Dialysis Centre ,N.N. Nehru , Minister KN Nehru inaugurated the newly upgraded Full Body Examination Center and Dialysis Center at a cost of Rs.37 lakhs.
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...