குழந்தையுடன் ஆட்டோவில் கடத்திச் சென்று மியான்மர் அகதி பெண் கூட்டுப் பலாத்காரம்: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: குழந்தையுடன் ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட மியான்மர் அகதிப் பெண் ஒருவர் டெல்லியில் 4 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியின் விகாஸ்புரியில் மியான்மர் நாட்டை சேர்ந்த பெண் அகதியும் (21), அவரது கணவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த மாதம் முதல் அந்தப் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த 22ம் தேதி தனது கணவருடன் காளிந்தி கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அந்தப் பெண் சென்றார்.

அன்றைய தினம் டாக்டரைச் சந்தித்த பிறகு, இரவு 9.30 மணியளவில் காளிந்தி கஞ்ச் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். பின்னர் அவரது கணவர் கழிவறையை பயன்படுத்துவதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். இடைப்பட்ட நேரத்தில், சாலையோரம் ஆட்ேடா ஒன்று நின்றிருந்தது. அந்த ஆட்டோவின் டிரைவர், திடீரென கையில் குழந்தையுடன் நின்றிருந்த பெண்ணின் வாயில் துணியால் கட்டி அவரையும் குழந்தையையும் ஆட்டோவிற்குள் இழுத்து போட்டார். பின்னர் அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்றார்.

தொடர்ந்து அங்கிருந்த தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து மொத்தம் 4 பேர் அந்தப் பெண்ணை பாலியல் கூட்டுப் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றனர். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், சுயநினைவை இழந்து அங்கேயே கிடந்தார். அடுத்த நாள் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, அந்தப் பெண்ணின் நிலைமையை கண்டு போலீசிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: