கடையம் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம்

கடையம்: கடையம் பகுதியில் தோட்டத்தில் புகுந்த ஒற்றையானை 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாலையோரம் இருந்த பனை மரத்தையும் முறித்துச் சென்றதால் பரபரப்பு நிலவுகிறது. தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலையடிவாரம் அமைந்துள்ள தோப்புகளுக்குள் கூட்டமாகவும் சில நேரங்களில் தனியாகவும் புகும் யானைகள் அங்குள்ள பயிர்களையும் சொட்டுநீர் பாசனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களையும் சேதப்படுத்திச் செல்கின்றன.

இதனால் விவசாயிகள் இரவு காவலுக்கு செல்ல முடியாமலும் பகல் வேளையில் கூட தனியாக தோட்டங்களுக்கு செல்லவும் அச்சமடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மாதாபுரம் கானாவூர் அருகில் உள்ள சேகர் என்பவர் தோட்டத்தில் நேற்று புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. கடவாக்காடு செல்லும் சாலையில் உள்ள ஒரு பனைமரத்தை முறித்து குருத்தைத் தின்றுவிட்டு சென்றுள்ளது. அதன் அருகில் உள்ள வெய்க்காலிபட்டி பரமசிவன் என்பவருடைய தோட்டத்திலும் வாழை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் செல்லாமல் விளைநிலங்கள் உள்ள பகுதிகளை சுற்றி வந்தது.

இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி ஆலோசனையின்படி, வனக்காப்பாளர் ஆறுமுக நயினார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் தீவிர முயற்சி செய்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகும் யானையால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கருத்தபிள்ளையூர் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் கடந்த சில தினங்களில் 200க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: